திங்கள், 30 ஜூலை, 2012

பன்முக எழுத்தாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனின் நேர்காணலில் கேட்டவை

இன்று திங்கட்கிழமை  (30.07.2012 திங்கட் கிழமை) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி “ரமழான் வசந்தம்“ நிகழ்ச்சியில் பல்துறை ஆளுமைமிக்க அஷ்ரப் ஷிஹாப்தீனின் நேர்காணல் நேரலையாக இடம்பெற்றது.

நம்நாட்டுப் பிரபல கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும், முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் பல நிகழ்ச்சிகளைச் செய்து நேயர்கள் அநேகரின் அடிமனதில் ஆழப்பதிந்திருப்பவரும்தான் அல்ஹாஜ் அஷ்ரப் ஷிஹாப்தீன். அவர் பற்றி பல்லாயிரம் பேரும் அறிந்திருப்பதால் அவர்பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து தலைப்புக்கு வருகின்றேன்.

இவரைப் பேட்டி கண்டவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜபீர்.

மிகவும் உற்சாகமான முறையில் பேட்டி இருவருக்குமிடையே சென்றுகொண்டிருந்தது மனதுள் மேலும் நிகழ்ச்சியைக் கேட்க வேண்டும் என்ற தூண்டுதலையே தந்துகொண்டிருந்தது.

இருவருக்குமிடையே நடந்த நான் கேட்டு மனதிற் கொண்டவற்றிற் சிலவற்றை வலைப்பூக்கு வருகைதந்துள்ள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்“ என்ற அவரது அறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் முதலில் நேயர்களுக்கு அறிமுகஞ் செய்துவைக்கப்பட்டது. அதில் உள்ள சில கதைகள் பற்றி மொழிபெயர்ப்பாசிரியர் சிறந்த கருத்துக்களை முன்வைத்தார். முதலில் அதில் வந்துள்ள ஒரு கதையான “காஸாவிலிருந்து ஒரு கடிதம்“ என்ற கதை பற்றி ஆசிரியர் சொன்னார். அதில் அவர், காஸாவை விட்டு அமெரிக்காவுக்குச் சென்ற நண்பருக்கு காஸாவிலிருந்து எழுதியிருக்கும் கடிதம் பற்றி நன்கு விபரித்துச் சொன்னார்.


இந்த அறபுக் கதைகளை மொழிமாற்றம் செய்வதற்கு அவர் தகுதி வாய்ந்தவர் என்பதை அவரது ஒரு கூற்று எனக்கு நன்கு புலப்படுத்தியது. நான் “நளீமியாவில் கற்றேன்...., நளீமியாவில் அறபு நூல்கள் பல உள்ளன. அவற்றைப் படிக்க வாழ்நாள் காணாது. அறபு மொழி இலக்கியம் வளம் நிறைந்தது. எகிப்திய எழுத்தாளர் தாஹா ஹஸனின் “அய்யாம்” சுயசரிதை எமது சிரேஷ்ட மாணவர் ஒருவரால் படித்துக் காண்பிக்கப்பட்டது. அறபு மொழிக் கதைகளில் உள்ள மொழிநடை போற்றத்தக்கது. கதை சொல்லும் பாங்கு வாசர்களை சுண்டியிழுக்கிறது. மேலும் மேலும் கதாசிரியர்களின் கதைகளை உள்வாங்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகின்றது.... எனவே நானும் இவ்வாறான அறபுக் கதைகளைக் கண்டு தாய்த்தமிழில் கொடுக்க வேண்டும் என்று அவா கொண்டேன். அதன் வெளிப்பாடாக இணையத்தில் அறபுக் கதைகளைத் தேடினேன். வெற்றி கண்டேன். நல்ல பல கதைகள் எனக்குக் கிடைத்தன. என்னையே என்னால் நம்ப முடியவில்லை. இன்று “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்“களாக அறுவடையாகியிருக்கின்றது என்றார்.

இன்று எழுதும் கலைஞர்கள் தங்களை அடையாளப்படுத்தாமலேயே ஆக்கங்களைச் சமர்ப்பிக்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

“80 - 85 க்கு முன்னர் ஆக்க இலக்கியவாதிகள் தங்களை இனங்காட்டிக் கொள்ளாதது உண்மைதான். என்றாலும் 90 களின் பின்னர் தங்களை இனங்காட்டியே எழுதிவருகின்றனர். சிலர் தங்களை இனங்காட்டிக் கொள்ளாமைக்குக் காரணம் யாதெனின் தமது எழுத்துக்களின் பால் வாசகர்கள் குறைந்துவிடுவார்களோ என்ற பயம்தான். என்றாலும் இன்று பெரும்பான்மையினரும் தங்களை இனங்காட்டியே எழுதி வருகின்றார்கள். என்ற அவர்,

ஆக்க இலக்கியங்களைப் படைப்பவர்கள் பயப்படவதற்குக் காரணம் அவர்களின் எழுத்துக்களின்பால் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது போலும் என்ற கருத்தை உணர்த்தும்வகையிலான கூற்றும் இடம்பெற்றது. அதுபற்றி அவர் சொல்கையில் சாப்பாட்டில் சாப்பாடு - நல்ல சாப்பாடு என்றிருக்கிறது. எழுத்தில் எழுத்து - நல்ல எழுத்து என்றிருக்கிறது. ஒலிப்பாளரில் ஒலிபரப்பாளர் - நல்ல ஒலிபரப்பாளர் என்றிருக்கிறது. அதுபோல எழுத்துக்களில் நல்ல எழுத்துக்கள் இருந்தால் அவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் பேசப்படும்“ என்றார். இன்று நான்கு வரிக் கவிதைகளை எழுதிவிட்டுக் கவிஞர் என்று அடை போட்டுக் கொள்பவர்களே நிறையப் பேர் இருக்கின்றனர். “ஜே.பீ“ (சமாதான நீதவான்) பட்டம் பெறுவதை விட இலகுவாக இவர்கள் கவிஞர் பட்டத்தைச் சூட்டிக் கொள்கின்றனர் என்று அவர் சிரிப்பு கலந்து பேசிய பேச்சு (என்னையும்) ஒருகணம் சிந்திக்க வைத்தது.

எமது எழுத்துக்கள் எமது இஸ்லாமிய கலாசாரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் ஆணித்தரமாகச் சொன்னார்.

எமது எழுத்துக்களை நாமே உயர்த்திப் பேசுவதை விடுத்து பிறர் அதைப் பற்றி காலந்தாழ்த்தியேனும் அங்கீகரிக்க பதங்களை விடுத்து நல்ல வளம்மிக்கவற்றையே கொடுக்க வேண்டும்.

கவிதைகள் பற்றிச் சொல்லும்போது மரபுக் கவிதைகளை வியந்து போற்றியது பாராட்டத்தக்கதாய் இருந்தது. என்றாலும் இன்று நம்மவரில் பலர் மரபுக் கவிதைகள் பற்றித் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். எழுத்தசை சீர் அடிதொடை எல்லாம் நன்கு கற்றிருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கு ஒன்றைப் புதுமையாக அழகாகக் கொடுக்கத் தெரியாதிருக்கின்றது. என்ற அவரிடம்,

வாசகர் வட்டம் பற்றிக் கேட்ட வினாவுக்கு,

சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப இங்கு வாசகர் வட்டம் இல்லையென்றே சொல்லாம்.  ஒரு படைப்பாளி 500 புத்தகங்களை விற்றுக் கொள்ள முடியாத நிலை இங்கு நிலவுகின்றது. என்றாலும் இன்று இணையத்தின் மூலம் நிறையப்பேர் நிறையவே கற்கிறார்கள். வாசகர் வட்டம் நாளுக்கு நாள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.

(இது காத்திரமானதுதான். என்றாலும் அந்த வாசக வட்டத்தினர் தாம் நேசிக்கும் எழுத்தாளர்களின் நூல்களில் ஒன்றையேனும் கொள்வனவு செய்யின் உண்மையில் எழுத்துக்கலை உச்சாணியில் நிற்கும். எழுத்தாளர்கள் கடைக்குக் கடை ஏறியிறங்கத் தேவையில்லை. பதிப்பகங்களை நாடியிருக்கவும் தேவையில்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து)

அவர் கூறியவற்றில் நினைவில் நின்றவை இவை..

இடையே ஜபீர் உங்களைப் பற்றி ஒருவர் கூறப் போகிறார். உங்களுக்கு அவரை நன்கு தெரியும். என்றாலும் இப்போது தெரியாது தெரிந்து கொள்ளுங்கள் என்று நேர்காணலை நிறுத்திவிட்டு அழைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

தொடர்பில் இணைந்தவர் யார் தெரியுமா? காப்பியங்கள் பல தந்த நம்நாட்டுக் காவியக்கோ வைத்தியக் கலாநிதி ஜின்னாஹ் செரிபுத்தீன் அவர்கள்.

அவர் தமது கருத்துரையில்,

அஷ்ரப் சிஹாப்தீன் பன்முக ஆளுமைமிக்கவர். அவர் ஈழத்து இலக்கியத்தில் மின்னிப் பிரகாசிப்பவர். .....குறுகிய காலத்தில் தனது ஆளுமையில் காலூன்றி நிற்பவர். சகல துறைகளில் காலூன்றி இன்று மொழிபெயர்ப்பின்பால் கைவைத்திருக்கிறார். தம் பணியைச் சரியாகச் செய்யக் கூடிய அவரால் அது சாத்தியமாகின்றது. இன்று “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்களைத்“ தந்திருக்கின்றார்.

இலங்கையில் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடைபெற முழு மூச்சாகச் செயற்பட்டவர். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆர்வம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தோன்றக் காலாக நின்றது.......... அவரது கலைப்பயணம் தொடர வாழ்த்துகின்றேன்” என்று வாழ்த்தினார்.

இறுதியாக “ரமழான் வசந்த”த்தின் வழிகாட்டியான சட்டத்தரணி அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் அழைப்பேசியில் தொர்புகொண்டு “ரமழான் வசந்தத்தின்” வளர்ச்சிக்கு அஷ்ரப் சிஹாப்தீனின் கருத்தைத் தருமாறு சொன்னார். அதற்கு நமக்குப் பேரீச்சம் பழம் தந்த, (இன்னும் நான் பேரீச்சம் பழம் சாப்பிடவில்லை) அஷ்ரப் சிஹாப்தீன்,

“ ஒரு துறைசார் நிபுணரை இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவந்து (ஏலவே 45 நிமிட நிகழ்ச்சிக்குத் தயாராகி வருமாறு அழைத்து) குறுகிய நேரத்தில் பற்பல விடயங்களை ஆராய முயல்வது முயற்கொம்புக் கதை என்றும், குறைந்தளவு இவ்வாறு வரும் ஆளுமைமிக்கவர்களுக்கு 45 நிமிடங்கள் எவ்வாறேனும் ஒழுங்கு செய்து கொடுக்கபட வேண்டும்“ என்றும் குறிப்பிட்டார். (இதனுடன் நான் உடன்படுகிறேன். வந்தேன் கவிழ்த்தேன் ஆக முடியாதே!)

அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு 45 நிமிடங்கள் என்று கூறியபோதும் நிகழ்ச்சியில் அவருக்குக் கிடைத்த நேரமோ வெறும் 24 நிமிடங்களே. அதை  அவர் வாயினாலேயே கேட்டதும் மனதுக்குப் பாரமாகவிருந்தது.

முஸ்லிம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அடியேனின் தாழ்வான வேண்டுகோள்.)

---இவை எனது காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பவை. நினைவில் இன்னும் வர கட்டுரை நீளும்....-----

குறை காணின் பொறுத்தருள்க!

-கலைமகன் பைரூஸ்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக