புதன், 1 டிசம்பர், 2010

‘மேற்கு மனிதன்’ கவிதை நூல் ஒரு நோக்கு


மேற்கு மனிதன் கவிதை நூல்
ஆக்கியோன்:
எஸ். ஹுஸைன் மௌலானா
பதிப்பகம் :
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
தொடர்பு :
20/5 பி, 10ஆவது ஒழுங்கை, கொழும்பு 03

ரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால் கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். நூலாசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தமது ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடல் மூலம் உள்வாங்கி கவிதையாய் வெளிக்கொணர்ந்துள்ளார். என்கிறார் பதிப்பாசிரியர் திக்குவல்லை ஸப்வான்.
கொழும்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் 07 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. மேற்கு மனிதன் எனும் கவிதை நூல்.           மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் தலைவராகவிருந்து அதனை வழிநடத்திச் செல்லும் சிந்தனாவாதி எஸ். ஹுஸைன் மௌலானாவே இந்நூலின் சிற்பி. ஏற்கனவே பல உரைநடை நூல்களைத் தந்த அவரின் முதல் கவிதா முயற்சி மேற்கு மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.
(நூலாசிரியர்  - எஸ். ஹுஸைன் மௌலானா)

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மற்றும் அகிம்சாமூர்த்தி மகாத்மா காந்தி ஆகிய இருவரின் புகைப்படங்களை அட்டையில் தாங்கி  வெளிவந்துள்ள இந்நூல், கவிஞரின் தாயார் மர்ஹுமா சித்தி அனீஸா மௌலானாவுக்கு சமர்ப்பணமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புதுக்கவிஞர்களைப் போலல் லாது தத்துவம்சார் - யதார்த்தப் பண்புகள் பொதிந்த வாழ்க்கை - வழி முறை தீர்வு ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் கவிஞராக மௌலானா தென்படுகிறார் என்று கலைவாதி கலீல் என் பார்வை யில் கூறியுள்ளார்.
இந்நூலின் உருவத்தை நோக்குங்கால், இது வசன கவிதைச் சாயலில் அமைந்து காணப்படுகின்றது. ஆயினும் கூடுதலாக உரைநடை கலந்துள்ள தையே அவதானிக்க முடிகின்றது. வசன கவிதைக்கு இதுதான் இலக்கணம் என ஒன்றைக் கொள்ள முடியாதிருப்பதால் அமைப்பினை வைத்து ந்நிலைக்கு வரலாம்.
மிக அண்மையில் வெளிவந்த கலைஞர் கருணாநிதியின் பொம்மை கேட்டு அழுத குழந்தை வெடித்துச் சிதறி தாயின் மீது உதிர்ந்து கிடந்தான் என்ற உருக்கமான கவிதையும் இதே வசன அமைப்புக்களையே கொண்டுள்ளது. புதிதாய் முளைத்த கவிதைத் தொகுதியாயினும் மேற்கு மனிதன் தரத்தில் நிமிர்ந்து நிற்கின்றான் எனத் துணியலாம்.
பணம் பண்ணுகிற பாதையும்
ஆணவம் செய்கின்ற அநீதியும்
மொத்த வடிவமாக
பிரதிபலிக்கும் பொழுது
தீமைகளே நன்மைகளாகக்
காட்சியளிக்கின்றன!
வரலாறு நெடுகிலும்
இவ்வாறான அநீதியின்
வடிவம்
வாழ்ந்திருக்கின்றது
என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
‘………..
இது அங்கு
அரேபியாவின்
ஆன்மாவை அழிக்கின்றது
ஆண்மையையும் அழிக்கின்றது.
எவ்வாறு?
மரபணு உணவினூடாக.
தீய துள்ளலிசைகளினூடாக
வக்கிரச் சினிமாவினூடாக
இதனால்தான்
பண்பு தொடப்படாத
உணர்வு உணர்த்தப்படாத
அறிவு அணுகப்படாத
ஓர் இனமாக
அரேபிய இனம்!
மனிதக் கும்பலாக
மாறியுள்ளார்கள் இவர்கள்!

இவ்வாறு மேற்கு மனிதன் ,டைக்கிடையே தூங்கலோசையோடும், துள்ளலோசையோடும் பாய்ந்து செல்கின்றான்.
மேற்கு மனிதன் எனும் தலைப்பொடு விளங்கினாலும் அங்கு மேற்குலகை மாத்திரமன்றி, தன் இனத்துக்குள் துவம்சம் செய்பவர்களையும் பெரிதும் இவ்வெழுத்துக்கள் கழுத்து நொறுக்கின்றன.
ஓரிரு சொற்கள் புரிந்துகொள்ள வியலாத சொற்களாய் வலம் வருகின்றன. எடுகோளுக்கு ஒன்று பர அபர வித்யாவ. ,தன் பொருளை விளங்கிக்கொள்வது வாசகர்களுக்குக் கடினமாக இருக்கலாம். அவ்வாறான தத்துவார்த்தமான சொற்களை கையாளும்போது அடிக்குறிப்பிடுவது வாசகர்களுக்குள் ஏற்படும் மயக்கத்தை நீக்கும.;

மேற்கு மனிதனைத் தோலுரித்துக் காட்டுவதோடு நின்றுவிடாது, மகாத்மாவின் கருத்துக்களையும் ஐன்ஸ்டீன் போன்ற சித்தாந்திகளையும் கவிதையினூடாக உள்வாங்கச் செய்கின்றார் கவிஞர்.

தொலை நோக்கு இல்லாத அறிவு
தொலை நோக்கு இல்லாத தேசங்கள்
தொலை நோக்கு இல்லாத மானுடம்
மொத்தத்தில்
அழிவுக்கான பாதை!
இவை அற்பப் புத்தி கொண்டவர்களின்
சிம்ம சொப்பனம்
இவர்களின் கைவரிசையில்
விளைவதே இன்றை
மானுட அழிவின் யுத்தங்கள்
இவை எங்கு தீர்மானிக்கப்படுகின்றன?
ஆய்வு கூடங்களில்!
மனித ஆத்மாவுக்கு
ஒரு சவாலாக
இது மேற்கினுடைய
நவீன சிந்தனை.
ஒரு அமெரிக்கனுடைய
பெரு வாழ்விற்கு
ஓர் அரேபியனுடைய
உயிர்ச்சாவு அவசியமாகின்றது.
இது மேற்கு
ஆய்வு கூடங்களில்தான்
வடிவமைக்கப்படுகின்றது.
இதை விஞ்ஞானிகள் செய்கிறார்கள்.

இக்கவிதா வரிகளில் 100 பக்கத்திலும் நீண்ட கவிதை உள்ளடக்கம். தனது இஸ்லாமிய சமுதாயம் பகடைக்காயாய் எங்கணும் என்ற ஏக்கம் கவிஞருக்குப் பல்வேறு கருத்துக்களை உள்வாங்க வைத்திருக்கின்றதை உணர முடிகின்றது.
எந்தவொரு இலக்கியமாயினும் இலட்சியம் இன்றேல் அது இலக்கியமாகாது. இலட்சியம் என்ற வடசொல்லிலிருந்தே இலக்கியம் பிறந்திருக்கின்றது. மேற்கு மனிதனைத் தந்துள்ள கவிஞரோ ,லட்சிய புத்திரராய்ப் படுகின்றார்.
புதுக்கவிதையின் சாரதியாய் பாரதி திகழ்ந்தான். அவன் கவிதைகள் நின்று நிலைப்பதற்கு ஏதுவாயினவெல்லாம் அவன் கருத்துக்களே. அவை வீறு கொண்டவை. புதுப்பாதைக்கு வழிவகுத்தவை. ,ங்கு எஸ். ஹுஸைன் மௌலானா என்ற கவிஞரும் புதுப்புது அறிவியல் கருத்துக்களை முன்வைக்கின்றார்.
ஒவ்வொருவரும் தங்களுக்குள் உதிக்கும் நியாயமான கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் படைத்தவர்கள். அவர்தம் சுதந்திரத்தை எந்த விலங்கு கொண்டும் மாட்டவியலாது, குரல் வளையை நொறுக்க வியலாது. மேற்கு மனிதனில் அவருக்குச் சொந்தமான கருத்துக்களும் வீறுகொண்டெழுந்துள்ளன. அவை எந்தளவில் வெற்றிகொள்ளவல்லன என்பது காலத்தின் கையில்தான் தங்கியுள்ளது. ஆயினும், நல்ல பல சிந்தனைகளை முன்வைத்துள்ள பாங்கு போற்றற்குரியது.

ஒருசிலர் வாழ்த்த வருகின்றார்கள்
உண்மையில்
இவர்கள் வாழ்த்த வருகின்றார்களா
வீழ்த்த வருகின்றார்களா?
ஒருகணம் சிந்திக்க வேண்டியுள்ளது.
இரண்டு தசாப்த பொதுவாழ்வில்
பலவாறு நாம்
வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம்.
பகையாலும்
உறவாலும்தான்.
எமது அமைப்பு
யாரையும் சார்ந்து
யாசகம் கேட்கும்
அமைப்பல்ல.
பிறரைச் சார்ந்து எதையும்
சாதிக்க விரும்பாத அமைப்பு.

என்ற வரிகளின் மூலம் தம்மை இனங்காட்டுகின்ற கவிஞர் மௌலானா எதையும் திறந்த மனத்துடன் கூறும் இயல்பினராக முன்நிற்கின்றார்.

அடிபட்ட புலியும்
மிதிபட்ட பாம்பும்
சீண்டப்பட்ட யானையும்
வஞ்சிக்கப்பட்ட மனிதனும்
வஞ்சம் தீர்த்துக்கொள்ள
முயல்வது இயல்பு.
இதனால்தான் மனிதன்
நவீன காலத்து மனிதனை
எதிர்கொள்ள
அதிநவீன காலத்து மனிதனாகப்
பரிணமிக்க வேண்டிய
கட்டாயத்துக்குள்ளாகின்றான் என்ற வரிகள் நெஞ்சையள்ளுவன, சிந்தனையைக் கிளறுவன. யதார்த்தத்தை உணர்த்துவன.
நல்ல பல கருத்துக்களை முன்வைத்துள்ள கவிஞர், கவிதை உலகில் சிறிது தூரமாயினும் யாத்திரிகம் செய்வாராயின், தனது சொந்த  அறிவுபூர்வமான நல்ல பல கருத்துக்களுடன் கூடிய பல அறிவியல் நூல்களை எங்களால் நுகர முடியும்.

-அபூஹக்
நன்றி - சுடர் ஒளி (நூற்சுவை நுகர்வோம்)

1 கருத்து: