புதன், 1 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை தரும் தமிழ்சினிமா







உலக சினிமாக்கள் மனித இயல் கூறுகளை கேமராவின் கோணங்களுக் குள் சிறைப்படுத்தி விடுவதால் பார் வையாளனின் அக உணர்வுகளோடு பேசும் தன்மை கொண்டு விளங்கு கின்றன. இத்தகைய சினிமாக்கள் எதிர் விமர்சனங்களை விட்டும் வெகு தூரத் திலும், விருதுகளுக்கு சமீபமாக வும் இருப்பதென்பது அதிகதிகமான பார்வை யாளன் மனதில் சினிமா மீதான புரி தலையும், நம்பிக்கையையும் வி தைக் க வழிவகை செய்கின்றன. இவ் வு லக சினிமாக்கள் மனித வாழ்வு, கலாசாரம், பண்பாடு போன்றனவற்றை அடையா ளப்படுத்துவதோடு மாத்திரமின்றி நல்ல பல விடயங்களைப்பற்றி கற்பித்துக் கொடுக்கவும், விழிப்புணர்வை உண்டாக்கவும் தவறுவதில்லை. கொரியா சினிமாக்களில் பௌத்த சூத்திரங்களை ஆராய்கிறார்கள். சீன சினிமாக்களில் கன்பூசியஸ் தியரி சொல்லப்படுகிறது. ஈரானின் சினிமாக்கள் உலக அரங்கில் முன்னனியில் நிற்கின்றன. இதில் குர்ஆன் கூறுகின்ற உலக தர்மங்கள் பேசப்படுகின்றன. இவ்வாறாக சினிமாக்கள் அமைகின்றபோது இவ்வகைச் சினிமாக்கள் காலத்தின் தேவையாகவும், சமூகத்தின் அங்க மாகவும் முன்னிருத்தப்படுகின்றன.



இத்தகைய உயரிய பண்புகளை தன்ன கத்தே செறித்துக்கொண்ட எத்த னை தமிழ் சினிமாக்கள் வெளிவ ருகின்றன என எண்ணிப்பார்க்கையில் தான், தமிழ் சினிமா மீதான ஆதங்கங்கள் தலை நிமிர்ந்து நின்று எம்மைத் தலை குனியச் செய்கின்றன. எல்லா நாட்டுச் சினிமாக் களிலும் ஜனரஞ்சக சினிமாக்கள் இருந் த போதும் தமிழ் சினிமா உலகம் இத் தகைய ஜனரஞ்சக லேபிளுக்குள நல்ல சினிமாக்களை விழுங்கி ஏப்பம் விட்டி ருக்கின்ற அளவு வேறெந்த மொழிச் சினிமாக்களிலுமில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். தமிழ் சினிமா என் றால் அதில் வன்முறையும், பாலியல் வக்கிரமும் மையமிட்டிருக்கும் என்ற நிலைக்கு எமது சினமா தள்ளப்பட்டிருக்கிறது. நிஜத்திலும் துப்பாக்கியையும், குண்டுகளையும், வன்முறையையும் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் எமக்கு சினிமாவிலும் இதைத்தான் தருகிறார்களே என்ற ஆதங்கமே விஞ்சி நிற்கின்றது. இந்த ஆதங்கத்தினாலே தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப் பதற்காய் திரையரங்கிற்கு செல்வதிலிருந்து என்னைப் போன்ற பலர் தவிர்ந்திருக்கின்றனர். இப்படித் தவிர்ந்திருப்பதன் விளைவாக ஆங்காங்கே அத்தி பூத்தாற் போன்று வெளிவரும் நல்ல தமிழ்ப்படங்களையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறவிட்ட பின்னர் பல நண்பர்களின் சிபாரிசின் பேரில் அண்மையில் காலம் தாழ்த்திப் பார்க்கக் கிடைத்த “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படம் உண்டாக்கிய அகசலனம்தான் இந்தக்கட்டுரை.



பேருந்து ஓட்டுனர்களின் ஒருநொடி அவசரம் அதில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளின் வாழ்க்கை யையும் எப்படிச் சீரழிக்கின்றது என்பதை உருக்கமாக சொல்கிறது திரைப்படம். இன்றைய காலத்தின் கட்டாயத்தை அப்படியே வெளிக் கொணரும் ஒரு காவியம் இது. வாகன விபத்துக்கள் இயல் பாகிப் போன இன்றைய சூழலில் இந்தத் திரைப்படம் அவசியமான ஒரு பதிவாகியிருக்கிறது. பாதை ஒழுங் கை மீறுவதும், வாகனங்களில் அவசரம் காட்டுவதும் எவ்வளவு பாதகமானது என்பதை திரை மொழியினூடாக இயக்குனர் நேர்த்தியுடன் பதிவாக் கியிருக்கின்றார். காலத்துக்குத் தேவை யான கதைக்கரு, கதைக்குப் பொருத்தமான பாத்திரத் தெரிவுகள், பாத்தி ரங்களுக்குப் பலம் சேர்க்கும் யதார்த்தமான காட்சிகள், காட்சிகளுக்கு உயிரூட்டும் இசை என படம் முழுக்க நல்ல சினிமாவிற்கான அடையா ளங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு பேருந்து விபத்தை இப்படியும் படமாக் கலாம் என்பதை ஏனைய இயக்குனர்களுக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார் புதுமுக இயக்குனர் சரவணன். முதல் காட்சியிலே கோரமான பேருந்து விபத்தைக் காண்பித்து அதிர்ச்சியை ஏற் படுத்திய இயக்குனர், அந்த அதிர்ச்சியை அப்படியே இறுதிக்காட்சி வரை யில் கொண்டு சேர்த்திருக்கும் திரைக்கதையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பேருந்திலே பயணிக்கும் இரு காதல் ஜோடிகளின காதலை மையப்படுத்தித் திரைக் கதை அமைக்கப் பட்டிருந்த போதும், பேருந் திலே பயணம் செய்யும் இளஞ் சோடிகள், எப்பொ ழுதும் தூங்கி வழியும் ஒருவர், தனது நான்கு வயதுக் குழந்தையை முதன் முதலில் பார்க்கும் ஆசை யில் வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் ஒரு தந்தை, பேருந்தினுள் காதல் வயப்படும் இருவர் என அனைத்துப் பிரயானிகளையும் திரைக்கதைக்குப் பலமாக்கியிருப்பது இயக் குனரின் திறமைக்கு சான்று பகர்கின்றன. இதே போல் இத்திரைப்படத் தில் நடித்திருப்பவர்களும் தத்தமது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின் றனர்.


நாயகன் ஜெய் ஒரு கற்புக்கரசன். பொதுவாக பெண்களைத்தான் கற்புக்கரசி என்பார்கள். இந்தத்திரைப்படத்தில் தனது அமைதியாலும், ஒழுக்கத்தாலும் பெண்ணுக்குரிய இலக்கணங்கள் பொருந்திய ஒருவனாக கற்புக்கரசனாக காண்பிக்கப்பட்டிருக்கும் இந்த முரண் அழகியல் ரசிக்க வைக்கின்றது. அன்பு, காதல், காமம், போன்றன வக்கிரமானதல்ல, அது இயல்பானது என்பதனை தனது நடிப்பின் மூலமாக திறம்பட வெளிப்படுத்துகின்றார். காதலியை தூரத்திலிருந்து காதலிக்கும் போதும், காதலி முன் அடக்கமாக பேதலிக்கும் போதும் அனைவரையும் ஈர்க்கின்றார் ஜெய்.

அஞ்சலி பாரதி கண்ட புதுமைப்பெண்ணை பிரதிபலிக்கின்றார். காந்த சக்தியாக எல்லோரையும் கவர்ந்திழுக்கின்றார். ஜெய்யை அதட்டுவதாக இருக்கட்டும், ஜெய் மேல் அன்பு காட்டுவதாக இருக்கட்டும், இறுதிக் காட்சியில் “அவன் நல்லவன் சார்” எனக் கூறிக்கொண்டு கதறி அழுவதாக இருக்கட்டும் நடிப்பில் பல பரிமாணங்கள் காட்டியிருக்கின்றார். இவர் அழும் காட்சியில் பார்வையாளர்கள் அனைவரின் கண்களையும் கண்ணீர் நிறைத்திருக்கும். அஞ்சலி விருதுக்குரியவர்தான்.

அனன்யா கதாபாத்திரம் படித்த கிராமிய வெகுளிப் பெண்ணை அப்படியே ஞாபகப்படுத்துகிறது. இவரது நகைச்சுவை கலந்த நடிப்பும் போற்று தலுக்குரியது. மேலும் நகைச்சுவைக்கு பிரத்தியேக ஆசாமிகள் தேவை யில்லை என்பதனையும் இது வலியுறுத்துவதாய் அமைகின்றது. சர்வா இயல்பாக நடித்திருக்கின்றார். சர்வா அனன்யாவுடன் அறிமுகமான அதே கணத்திலிருந்து வன்முறை கலந்த உரிமையோடு பழக ஆரம்பிக்கின்றார். “உங்களது பெயரென்ன?” என சர்வா கேட்ட பொழுது! “ எனது பெயரைக் கேட்கக் கூடாது. நீங்கள் யார்? உங்களது பெயரென்ன? என்றெல்லாம் நானும் கேட்க மாட்டேன்” என அனன்யா பதில் சொல்வது அழகு. மேலும் கிராமப் பெண் நகரத்திற்கு தனியே செல்லும் போது அவள் படித்த பெண்ணாக இருக்கின்ற படியால் அவளிடம் இருக்கும் முன்னெச்சரிக்கையையும், இந்த முன்னெச்சரிக்கைக்குள் புதைந்திருக்கும் அவளது அறியாமையையும், வெகுளித்தனத்தையும் இவர்களுக்கிடையிலான பல காட்சிகள் சொல்லிச் செல்கின்றன. அனன்யா போன்ற கிராமியப் பெண்களின் உணவு, உடை, காற்று, நீர் என்பன இயல்பானது. எனவே சிந்தனையும் இயல்பாகத்தான் பிரதிபலிக்கும். கிராமத்தவர்கள் ஒழிவு ,மறைவின்றி இயல்பாகவே சொல் லிவிடுவார்கள். இதைத்தான் அனன்யா கதாபாத்திரம் மிகவும் அழகாக வெளிப்படுத்தகின்றது. மேலும் மரபு வழிவந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அனைத்து அம்சங்களையும் அனன்யா ஏந்தி வந்து எம் எல்லோரையும் கவர்கின்றார். “ இவர்களெல்லாம் சாப்பாடு கட்டி வரமாட்டார்களா? எங்க ஊரிலே பெண்களும் சாப்பாடு கட்டிக்குத்தான் வேலைக்குப் போவாங்க” என அவர் கூறும் வசனமே போதும் கிராமத்திற்கும், நகரத்திற்குமிடையிலான வாழ்வியல் முரண்பாட்டை புரிந்து கொள்ள.  இதே நேரம் ஒவ்வொரு கிராமத்தவருக்கும், நகர வாசிகளின் வாழ்வு முறைமீதான ஈர்ப்பும் இருக்கின்றது என்பதனையும் இயக்குனர் வெளிப்படுத்தத் தவறவில்லை. இறுக்கமான ஆடை அணிந்து செல்லும் பெண்களைப்பார்த்த அனன்யா தானும் தனது ஆடைகளைக் கைகளால் இறுக்கிக் கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். மேலும் நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கும் காட்சிகள் இரண்டைப்பற்றிப் பேச வேண்டியுள்ளது. ஓன்று ஜெய்யிடம் ஒருவன் தான் கல்லூரி மாணவியைத் தள்ளிக்கிட்டு வந்திருப்பதாக சொல்லும் காட்சி. மற்றையது தகப்பன் மகனிடம் திருமணம் பற்றி தரம் கெட்ட வார்த்தைகளால் உரையாடும் காட்சி. இவ்விரு காட்சிகளும் எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய போதும் இதுதான் இன்றைய நகர வாழ்க்கைக்கான அடையாளங்கள் எனும் சமூக அவலத்தைக் கோடிட்டுக் காட்டுவனவாய் உள்ளன.


நரக வாழ்வாகவே அமையப்பெற்றிருக்கும் நகர்ப்புற வாழ்க்கை பற்றிய எச்சரிக்கைகள் கிராமத்தவர்களிடையே இன்னும் கோலொச்சியிருக்கின்றது என்பதனை இவ்வளவு பொருத்தமாக கதையிலே கையாண்டிருக்கும் இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கலையும், கவிதையும், இசையும் அன்போடும், காதலோடும் உரையாட வைத்திருக்கின்ற பாடல்கள் உடலோடும், காமத்தோடும தொடர்புபடுத்தி; எழுதப்படுகின்ற இன்றைய வக்கிரப் பாடல்களில் இருந்து மாறுபட்டு நிற்பது, காட்சிகளை நல்ல சங்கீதங்களால் கவர்ச்சிப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. காதலில் இரண்டு மனங்களும் கலந்து போய் ஒன்றாகிவிடும் ரசாயண மாற்றத்தை “சொட்ட சொட்ட நனைய வைத்தாய்” என்ற பாடல் அழகாகச் சித்தரிக்கின்றது. மேலும்; காட்சித் தொகுப்புகளாக( மொன்டேஜ்) வரும் “கோவிந்தா கோவிந்தா “ பாடல் ஒரு பெண்ணால் ஒருவனுக்கு ஏற்படும் சங்கடத்தின் வழியேயும், அவள் மீது அவனுக்குள் காதல் பூப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் நகைச்சுவையாகவும், அழகியலோடும் பதிவு செய்கின்றது. பாடல் வரிகளாக இருக்கட்டும், இசை யாக இருக்கட்டும், பாடலைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமாக இருக்கட்டும், பாடல்கள் கதைக்கு வலு சேர்ப்பனவாகவும், கதைக்குள் கதை பேசுவ னவாகவும் இருக்கும் வண்ணம் அமையப்பெற்றிருப்பதுதான் இந்தத் திரைப்படப்பாடல்களின் சிறப்பாகும். இப்படியான பாடல்கள் இருக்குமாக இருந்தால் தமிழ் சினிமாவிற்கு பாடல்கள் அபத்தமானது எனும் நிலைமாறி ஆரோக்கியமானது எனும் நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்கின்ற போது “எங்கேயும் எப்போதும்”; திரைப்படம் தமிழ் சினிமாவின் மாற்றத்திற்கான முக்கிய நுழைவாயிலாகவே தென்படுகிறது. ஆதலால் இது போன்ற நல்ல சினிமாக்களை வரவேற்க தமிழ் ரசிகர்கள் எங்கேயும் எப்போதும் தயாராக இருக்கின்றார்கள் என்பதனை இந்தத் திரைப்படத்தின் வெற்றி ஊர்ஜிதப் படுத்தியிருக்கின்றது.

-எஸ். ஹுசைன் மௌலானா
moulanasish@yahoo.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக