புதன், 3 ஆகஸ்ட், 2011

யாத்ரா


யாத்ரா'
ஆசிரியர்:
கவிஞர். அஷ்ரப் சிஹாப்தீன்
தொடர்பு :
‘யாத்ரா 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.

ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் தனியிடம் பிடிக்கின்றன. 1970களின் முன்னர் அதிகளவில் மரபுக் கவிதைகளையே ஈழத்துக் கவிஞர்கள் எழுதிவந்தனர். பத்திரிகைகளும் மரபுக் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வந்தன. அக்கால கட்டத்தின் பின்னர் புதுக்கவிதைத் தாக்கம் மிகுதியாகவும் இலக்கியத்தினுள் புகுந்துகொண்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை எழுதுபவர்கள் அதிகரித்தனர்.

(யாத்ரா ஆசிரியர்  - அஷ்ரப் சிஹாப்தீன்)


மரபுக்கவிதயும், புதுக்கவிதையும் ஒருபுறம் பேசப்பட, பிற்காலப் பகுதியில் ஹைக்கூக் கவிதைகளும் ஒரு சில கவிஞர்களால் எழுதப்பட்டு வந்தன. இது தவிரவும் ‘காங்கிரிட் கவிதை எனும் கவிதையையும் ஈழத்துக் கவிஞரொருவர் கவியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். (இதுபற்றிப் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதில் சந்தேகமில்லை.)
கவிதைகள் பல்வேறு நாமங்களில் வெளிவந்து கொண்டேயிருப்பினும் அவற்றுள் பெரும்பாலும் கையாளப்படுவன மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளுமே!
இந்தவகையில் இன்று சகல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் கவிதைக்கென்றே ஒருபக்கம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. கவிதை எழுதுபவர்களில் பெரும்பாலானோர் காலவோட்டத்தில் மறைந்து போகிறார்கள். சிலர் காலத்தால் பேசப்படுமளவிற்கு ஆக்கங்களைப் படைத்திருக்கிறார்கள், படைத்து வருகிறார்கள். பல பிரபல்யங்களுக்கு மத்தியில் சில இளசுகளும் இன்று தங்களது பெயர்களைக் கடல் கடந்த நாடுகளிலும் தக்க வைத்துவருகிறார்கள் என்பதும், அவர்களை இலக்கிய உலகம் கண்டு கொள்ளாமலிருப்பதும் வேதனைக்குரியது.
இந்த நிலையை மாற்றி வளரும் இளங்கவிஞர்களுக்கு கைகொடுக்க வேண்டும், அவர்கள் இலக்கியத்தில் தடம் பதிக்க வேண்டும் எனும் நன்நோக்கோடு நண்பர் இலக்கியக் குழு ‘யாத்ரா எனும் கவிதைகளுக்கான காலாண்டு இதழை அண்மைக் காலமாக வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் யாத்ராவின் ஆண்டு இதழ் எமது பார்வைக்குட்பட்டது. கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனை ஆசிரியராக்க் கொண்டு வெளிவரும் ‘யாத்ராவின் முதற் பக்கமே வெகு அசத்தல்.  ‘கவிதை வீட்டுக்கு வீடு ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால், என்னவென்று விளங்கவில்லையானால் அதை விட்டொழிப்பது உத்தம்ம் என்ற மஹ்மூது தர்வீஸின் கவிதையை அது தன் முதற்பக்கத்தில் சுலோகம் போலும் தாங்கிக் கொண்டுள்ளது.
‘இயல்பு நவிற்சி அல்லது யதார்த்தம் என்ற கவிதை மூலம் கவிஞர் ஏ. இக்பால் யதார்த்த்த்தை சிறந்த சொல்லாட்சியில் கையாண்டிருக்கிறார்.
கலாநிதி எம்.ஏ. நுஃமானின் ‘அவர்களும் நீயும் தற்காலப் போர்ச் சூழ்நிலையில் மனித அவஸ்தையை தெளிவுறுத்துகிறது. ‘சமுத்ரா தேவி, பேய்கள், சவால்களுக்குச் சம்மதம், நெருப்புத் தேசம், பேய், நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை, என்னைத் தீயில் எறிந்தவள் போன்ற கவிதைகள் நெஞ்சை அள்ளுவன.
த. ஜெயசீலன் எழுதியிருக்கும் கவிதை சர்ச்சைக்குரிய கவிதையாகி நிற்கிறது. சமூகத்தில் ‘நான்தான் பெரியவன் என்று தம்பட்டமடிப்பவர்களுக்கு பெரும் சாட்டையடி கொடுத்திருக்கிறார் ஜெயசீலன், தனது ‘எனக்குக் கல்லெறிபவனுக்கு கவிதை மூலம்.
கவிஞர் குறிஞ்சித் தென்னவன் பற்றிய அறிமுக்க் குறிப்பை அந்தனி ஜீவா எழுதியுள்ளார்.
கவிஞன் காலத்தால் அழிய மாட்டான், காலத்தின் கண்ணாடியாக இலக்கியம் விளங்க கவிஞன் பெரும்பங்காற்றுகிறான் – என்பதை யாத்ரா ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் ‘ஒரு யுகத்தின் தலைவனான கவிஞன் என்ற கட்டுரையில் நெஞ்சையள்ளும் வகையில் அழகுற விளக்கியுள்ளார்.
யாத்ராவின் ஆண்டு மலரில் எஸ்.எச். நிஃமத், ஏ. அமீரலி ஆகிய இருவரினதும் கவியரங்குக் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அத்தோடு எஸ். நளீமின் ‘சுதந்திரம் என்ற பார்வையும் இன்னும் பல படையல்களும் யாத்ராவை அலங்கரித்து நிற்கின்றன. ‘யாத்ரா தன் பயணத்தை இடைவிடாது தொடரும் என்பதற்கு அதனுள்ளே அமைந்துள்ள காத்திரமான படைப்புக்களே அத்தாட்சி.
கவிஞர் அல்-அஸ்மத், கவிஞர் மு. சடாட்சரன் இருவரினதும் செவ்விகள் அரிய பல தகவல்களைத் தந்து நிற்கின்றன. இன்னும் நெடுங்கவிதை, கட்டுரைகள், அறபு, சிங்கள மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்பவற்றோடு எஸ். நளீம், சிறிதர் பிச்சையப்பா இருவரினதும் அழகிய நவீன ஓவியங்களும் இடைக்கிடையே அமைந்து அழகுடன் மிளிர்கிறது யாத்ரா.
யாத்ரா உயர்தர வகுப்பு மாணவர்கள், இளங்கவிஞர்கள் – ஏன் வளர்ந்த எழுத்தாளர்களும்கூட வாசிக்க வேண்டிய அரிய கவிதை நூல்.
யாத்திரைகள் பல மேற்கொள்ள யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்!
தொடர்புகளுக்கு:
‘யாத்ரா 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.

‘இடி (புத்தகாலயம்) 27.05.2001
-கலைமகன் பைரூஸ்
நன்றி -
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக